×

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-26

நலமெலாம் வளர்க்கும் நரசிம்ம மூர்த்தி‘‘தர்மங்கள் சீர்குலைந்து, அதர்மங்கள் தலையெடுக்கும் காலங்களிலெல்லாம், அதர்மங்களை வேரறுக்கவும் சில தர்மங்களை நிலை நிறுத்தவும், யுகங்கள் ேதாறும் நான் அவதரிக்கிறேன்’’ என்று பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறியிருக்கிறான்.அகில உலகங்களையும் காக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக மட்டுமே பகவான் ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்கள்தான் எத்தனையெத்தனை? அந்த அவதார காலங்களிலெல்லாம் அவர் பட்ட துன்ப துயரங்களும், இன்ப அனுபவங்களும்தான் எத்தனையெத்தனை? அது மட்டுமா?’ அவர் பலவிதமான தோற்றங்களையுமல்லவா ஏற்றிருக்கிறார்!இப்படி பகவான் ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களும்கூட மண்ணுலக வளர்ச்சியின் பரிமாணங்களை உணர்த்துவதுபோல அல்லவா அமைந்திருக்கின்றன.முதலில் ஸ்ரீமன் நாராயணன் எடுத்த மச்சாவதாரம். மச்சம் – மீன் என்பது நீரில் மட்டுமே உயிர்வாழக் கூடியது.இரண்டாவதாக நீரிலும் – நிலத்திலும் உயிர்வாழக் கூடிய கூர்மாவதாரம்.மூன்றாவதாக நிலத்தில் மட்டுமே வாழக்கூடிய நிலத்தை அகழ்ந்து செல்லும் வல்லமையுள்ள வராகாவதாரம்.நான்காவதாக மிருகமும் – மனிதனும் இணைந்த வடிவமான நரசிம்மாவதாரம்.இதன் பின்னரே முழுமையான மனிதத் தோற்றமுள்ள வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணன் போன்ற அவதாரங்கள். ஸ்ரீமன் நாராயணன் எடுத்த இத்தகைய அவதாரங்களில், முதல் நான்கு அவதாரங்களும், வாமன அவதாரமும் குறுகிய கால அவதாரங்களாகக் கருதப் பெறுகின்றன.இதில் ஸ்ரீமன் நாராயணன் எடுத்த நான்காவது அவதாரமான நரசிம்மாவதாரம் தனிச் சிறப்புப் பெற்றது.காரணம் -மற்றைய அவதாரங்களில் பகவான் அனைத்து இடங்களிலும் தமது தோற்றத்தை நிலை நிறுத்திக் கொள்ளவில்லை.ஆனால் – நரசிம்மாவதாரத்திலோ – பிரகலாதன், ‘என் நாராயணன் தூணிலும் இருப்பான் – துரும்பிலும் இருப்பான்’ காணும் இடம் யாவும் கருக் கொண்டு – நிலைநின்றிருப்பான்’ என்று சொல்லியதை மெய்ப்பிக்க வேண்டி,இரண்யகசிபு எந்தத் தூணைப் பிளப்பானோ என்று புரியாமல், அனைத்துத் தூண்களிலும் தாம் நரசிம்மமாய் ஆவாஹனம் ஆகிவிட்டார்.பின்னர் இரண்யகசிபு எந்தத் தூணைப் பிளந்தும் நரசிம்மமாய் வெளிப்பட்டதும், இரண்யகசிபுவை வதம் செய்ததும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.ஸ்ரீமன் நாராயணன் தாம் எடுத்த நரசிம்மாவதாரத்தில் கோயில் கொண்ட திருத்தலங்கள் நம் நாட்டில் பல உள்ளனவென்றாலும் – நரசிம்மமூர்த்தி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளரும் திருத்தலம் ஒன்றினை இப்போது தரிசிக்கலாம். அத்தகைய புனித பூமிதான் நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படும் திருத்தலம்.இத் தலத்தில் ஸ்ரீநரசிம்மர் ஆலயம்  கொண்டதும், நாளும் வளர்ந்து நலமெல்லாம் தருவதும் ஒரு பக்திபூர்வமான வரலாறு.அந்த வரலாறு -இன்றைக்குச் சுமார் அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் -விஜயநகரப் பேரரசு தனது புகழ்க்கொடி உச்சியில் பறந்து கொண்டிருக்க ஆட்சி செலுத்திய காலம்.பேரரசின் மன்னனாக சாளுவநரசிம்மன் ஆண்டு வந்த நேரம்.அந்த மன்னன் தனது அரச சபையில், எல்லா கலைகளிலும், சாஸ்திரங்களிலும் தலைசிறந்து விளங்கியவர்களுக்குத் தனிச் சிறப்பான இடங்கள் தந்து கௌரவித்து வந்தான்.அப்படி அவனது அவையில் இடம்பெற்றிருந்து ராஜகுருவாகத் திகழ்ந்தவர் வித்யாரண்யர் என்கிற அத்வைத சாஸ்திர ஞானி.அவர் நாடெங்கிலுமுள்ள பண்டிதர்களை வரவழைத்து, அவர்களை வாதத்தில் வெற்றி கொண்டு, அதன் காரணமாகவே வித்யாரண்யர் (கல்வியில் அடர்ந்த காடு போன்றவர்) என்ற பெயரினையும் பெற்றார். இதனால் அவர் மிகவும் கர்வம் கொண்டிருந்தார்.அதாவது அந்தச் செருக்கினை அடக்க ஸ்ரீநரசிம்மர் திருவுள்ளம் கொண்டிருக்க வேண்டும் போலும்.மன்னன் சாளுவநரசிம்மன், ‘தன் ஆஸ்தான குருவான ஸ்ரீ வித்யாரண்யருக்குச் சமமாகவோ அல்லது அவரைவிட சிறந்த சாஸ்திர நிபுணரோ நாட்டில் இருந்தால் அவருடன் வாதத்திற்கு வர வேண்டும். அப்படி யாரும் வரவில்லையென்றால் அவரே தலைசிறந்த சாஸ்திர ஞானி என்று ஏற்கப்பட்டு, அவருக்கே அரசு மரியாதைகள் யாவும் ெசய்யப்படும்’ என்று அறிவித்துவிட்டான். நாடெங்கும் செய்தி பரவியது.அவ் வேளையில் துவைதசித்தாந்தம் அருளிய ஸ்ரீ மத்வரின் சீடர் பரம்பரையில் ஸ்ரீ அட்சோப்பிய தீர்த்தர் அமர்ந்திருந்தார். மிகசச் சிறந்த ஞானியான இவரிடம் பல பண்டிதர்கள் சென்று வித்யாரண்யரின் செருக்கினை அடக்குமாறு கேட்டுக் கொண்டனர்.தம்மிடம் வேண்டி நின்ற பண்டிதர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தமது இஷ்ட தெய்வமான ஸ்ரீநரசிம்மரின் திருவுள்ளக் குறிப்பே என்பதைத் தேர்ந்து தெளிந்தார் ஸ்ரீ அட்சோப்பிய தீர்த்தர். அட்சோப்பிய தீர்த்தர் அப்பொழுது, முளபாகலில் தற்சமயம் ஸ்ரீ பாதராஜர் பிருந்தாவனம் அமைந்திருக்கும் ஸ்ரீநரசிம்ம க்ஷேத்திரத்தில் தங்கியிருந்தார்.அங்கு தாம் தினமும் ஆராதிக்கும் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமிக்கு சிறப்பான பூஜைகள் செய்து, நெருப்புத் தணலால் தூபம் காட்டி, அந்த நெருப்புத் தணலை தாம் ஜபம் செய்து வைத்திருந்த பாத்திர நீரில் போட்டார். தணல் நெருப்பு நீரில் நனைந்து கரியாது. (கன்னட மொழியில் கரியை ‘அங்காரம்’ என்று அழைப்பார்கள். அதனை நெற்றியில் இட்டுக் கொள்வர்) அகங்காரம் கொண்டிருந்த ஸ்ரீவித்யாரண்யரின் செருக்கினை அடக்க, இந்த அங்காரம் என்ற கரித்துண்டினால் ஸ்ரீ நரசிம்மரின் அருள் வேண்டி, அவரைப் பிரார்த்தனை செய்தபடி அங்கிருந்த பாறையில் ஸ்ரீநரசிம்மரைத் தியானித்துக் கொண்டே ஸ்ரீ நரசிம்மரின் திருவுருவத்தை வரைந்தார்.தாம் வரைந்த ஸ்ரீ நரசிம்மரை ஆராதனை செய்து வழிபட்ட பிறகு, தம்முடன் வாதிட வேண்டி முளபாகலில் இருந்த அஞ்சனமலை மீதிருந்த ஒரு ஆலயத்தில் வந்து தங்கியிருந்த வித்யாரண்யருடன் வாதத்திற்குத் தயாராகிச் சென்றார்.இருவருக்குமிடையே நடைபெறும் வாதங்களைக் கேட்டு தீர்ப்பு சொல்லும் நடுவராக இருக்க ஸ்ரீ  தேசிகர் ஒப்புக் ெகாண்டார்.ஸ்ரீ அட்சோப்பிய தீர்த்தரும் ஸ்ரீ வித்யாரண்யரும் தங்கள் தங்கள் வாதங்களை எழுதி ஸ்ரீ தேசிகரிடம் அனுப்பினார்கள். அவர்களின் கருத்துக்களை நன்கு அலசி ஆராய்ந்த ஸ்ரீ தேசிகர், வாதத்தில் ஸ்ரீ அட்சோப்பிய தீர்த்தரே வெற்றி பெற்றார் என்பதைக் கூறும் வகையில்:‘அசிநாதத்வ மஸிநா பரஜீவப்ரபேதினாவித்யாரண்ய மஹாரண்யம் அஷ்யோப்ய முனிரச்சிநத்’என்னும் ஸ்லோகத்தை எழுதி சாளுவ நரசிம்ம மன்னனுக்கு அனுப்பினார்.அதற்குச் சான்றாக நரசிம்ம தீர்த்தத்திற்கு அருகிலுள்ள குன்றின்மேல் கல்லினால் ஜயஸ்தம்பம் அமைக்கப்பட்டு, கல்லில் மேற்கண்ட நிகழ்ச்சி செதுக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் சிதிலமடைந்திருந்த இந்த ஜயஸ்தம்பத்தை ஸ்ரீ பாதராஜர் மடத்தின் மடாதிபதியான ஸ்ரீ விக்ஞானநிதி தீர்த்த ஸ்வாமிகள் புதுப்பித்திருக்கிறார்கள்.அன்று ஸ்ரீ அட்சோப்பிய தீர்த்தரின் பிரார்த்தனைக்காக, பாறையில் சித்திரவடிவில் தோன்றிய  ஸ்ரீநரசிம்ம சுவாமி, நாளுக்கு நாள் ெவளிப்பக்கமாக வளர்ந்து, பாறையில் சிலா வடிவமாகத் தோன்ற ஆரம்பித்து, இன்றைக்கும் வளர்ந்த வண்ணமாக இருக்கிறார். இதனாலேயே பல வருடங்களுக்கு முன்னர் அவருக்காகச் செய்த கவசம், இன்றைக்குப் பொருந்தாமல் இருக்கிறது. ஸ்ரீ  நரசிம்மர் ஏன் நாளுக்கு நாள் வெளிப்பக்கமாக வளர்ந்து, சிலை வடிவம் பெற வேண்டும்?அதற்கும் காரணம் இல்லாமலில்லை.துருவனின் அவதாரமாக ஒரு ஞானியும், பிரகலாதனின் அம்சமாக ஒரு மகானும் அத் தலத்திற்கு வரப்போகிறார்கள் என்பதுதான் காரணம்.பக்த துருவனின் அவதாரமாகத் தோன்றியவர் ஞானி ஸ்ரீபாதராஜர். பிரகலாதனின் அம்சமாகத் தோன்றியவர், ஸ்ரீபாதராஜரின் சீடரும், பின்னாளில் ஸ்ரீ ராகவேந்திரராக அவதரித்தவருமான மகான் ஸ்ரீவியாசராயர்.இவர்கள் இருவரின் வரலாறுகளும் நரசிம்ம தீர்த்தத்தில் அருள்புரியும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்துடன் பிணைந்தே காணப்படுகின்றன.நரசிம்ம தீர்த்தம் என்னும் இத் திருத்தலம், கர்நாடக மாநிலம் – கோலார் மாவட்டம் -முளபாகல் நகருக்குக் கிழக்கே ஒன்றரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சித்தூர் வழியாக பெங்களூர் செல்லும் பாதையில் பாதையையொட்டியே அமைந்திருக்கிறது நரசிம்மதீர்த்தம் ஸ்ரீநரசிம்மர் ஆலயம்.பேருந்தை விட்டு இறங்கியதும் ‘நரசிம்ம தீர்த்தம்’  என்ற பெயர்ப் பலகை நம் கண்ணில் பட்டது. சுற்றிலும் பார்த்தோம். விண்ணைத் தொடும் கோபுரங்கள் எதுவுமே நம்கண்ணில் படவில்லை. மாறாக ஸ்ரீபாதராஜ சுவாமிகள் பிருந்தாவனம் என்ற பெயர்ப் பலகையுடன் ஒரு முகப்புக் கட்டிடமே நம் கண்ணில் பட்டது. நம் பார்வை நாளும் வளரும் நரசிம்ம மூர்த்தியின் திருக்கோயிலைத் தேடியது. நமது தயக்கத்தைப் புரிந்து கொள்ளாத நம்முடன் வந்த அன்பர், ‘‘என்ன சுற்றிலும் பார்க்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.நாம் நமது எண்ணத்தைக் கூறினோம்.அந்த அன்பர், ‘‘என்றைக்கு இந்த இடத்தில் துருவனின் அம்சமாக அவதரித்த மகான் ஸ்ரீபாதராஜர் வந்திருந்து ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு, இந்த இடத்திலேயே பிருந்தாவனைப் பிரவேசம் செய்தாரோ அன்றிலிருந்தே இந்த இடத்திற்கு ஸ்ரீபாதராஜ பிருந்தாவனம் என்ற பெயர் நிலைத்துவிட்டது’’ என்றார். தொடர்ந்து  ஸ்ரீபாதராஜரின் அற்புத வரலாற்றையும் நமக்குக் கூறினார்.ஆனந்தச் செறிவான பல சம்பவங்களைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அந்த வரலாறு:துவைதம் அருளிய மத்வரின் சீடர்களில் ஒருவரான பத்மநாபதீர்த்தர், லக்ஷ்மி தீர்த்தர் என்பவருக்கு ஆசிரமம் கொடுத்து ஒரு மடத்தை நிறுவினார். அதில் எட்டாவதாக பீடமேறி, மத்வ சித்தாந்தத்தைப் பரப்பியவர் சுவர்ணவர்ண தீர்த்தர் என்பவராவார். அவரது இயற்பெயர் பரசுராமதீர்த்தர்தான் என்றாலும், அவருடைய மேனி தங்கம்போல் பிரகாசித்ததால் சுவர்ண வர்ண தீர்த்தர் என்னும் பெயரினைப் பெற்றார்.ஸ்ரீரங்கத்தை வசிப்பிடமாகக் கொண்ட சுவர்ணவர்ண தீர்த்தர், புருஷோத்தம தீர்த்தர் என்பவரைப் பார்க்க அப்பூருக்குச் சென்றார். மாலை நேரம் நெருங்கிவிட்டது. நகரம் கண்ணுக்குத் தெரியவில்லை. எனவே வழியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் ‘‘அப்பூர் இன்னும் எவ்வளவு தூரம்’’ என்று கேட்டார்.அதற்கு அந்தச் சிறுவன் நேரிடையாக பதில் சொல்லாமல், ‘‘என்னைப் பாருங்கள்; என் மாட்டைப் பாருங்கள்; என் வயதை அறிந்து கொள்ளுங்கள்; சூரியனைப் பாருங்கள்; என்றான்.‘மலைவாயிலில் மறையத் தயாராகிவிட்ட சூரியன் இன்னும் சற்று நேரத்தில் இருள் திரையை விரித்துவிடுவான். அப்படியொரு நிலையிலும், சிறுவனான நான் இன்னும் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறேனென்றால், ஊர் கிட்டத்தில் இருப்பதாகத்தானே அர்த்தம்’ என்று தமக்குச் சிறுவன் சொல்லாமல் சொல்லிய சாதுர்யமான பதிலினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த சுவர்ணவர்ண தீர்த்தர், புருஷோத்தம தீர்த்தர் மூலமாக அந்தச் சிறுவனின் பெற்றோரிடம் பேசி, அவனுக்குச் சன்னியாச தீட்சை கொடுத்து, லக்ஷ்மிநாராயண முனி என்ற பெயரினை வைத்துத் தம்முடன் அழைத்துச் சென்றுவிட்டார். பன்னிரண்டு ஆண்டுகள் அவரிடம் தங்கி கல்வி பயின்று ஞானக் கடலாகவே மாறிவிட்டார் லக்ஷ்மிநாராயண முனி.அவ்வேளையில் வாதிகளைத் தோற்கடித்தபடி ஸ்ரீகொப்ரா என்கின்ற நரசிம்மக்ஷேத்திரத்திற்கு வந்த ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர். அந்த இடத்தின் எளிமையழகில் மனம் லயித்தவராய் அங்கேயே தங்கி, லக்ஷ்மிநாராயண முனி உள்ளிட்ட தமது சீடர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொண்டு வந்தார். அப்பொழுது அவரைப் பார்க்க வந்த உத்ராதி மடாதிபதியான ஸ்ரீரகுநாத தீர்த்தரிடம், தமது சீடனான லக்ஷ்மிநாராயண முனியைப் பரீட்சிக்கும்படி கூறினார். ஸ்ரீரகுநாத தீர்த்தர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் புத்திசாலித்தனமாக பதில் கூறிய லக்ஷ்மிநாராயண முனி ‘‘எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர்களின் அருளாசிகளே ஆகும்’’ என்றார்.அதற்கு ஸ்ரீ ரகுநாத தீர்த்தர் ‘‘நாங்கள் எல்லாம் ஸ்ரீபாதங்கள். நீங்கள் ஸ்ரீபாதர்களுக்கெல்லாம் மேலான ஸ்ரீபாதராஜர்’’ (மாத்வ சித்தாந்தத்தில் தீர்த்த சுவாமிகளை ஸ்ரீபாதர் என்று சொல்வது வழக்கம்) என்றார்.அன்றிலிருந்து லக்ஷ்மிநாராயண முனி ஸ்ரீ பாதராஜராக ஆகிவிட்டார்.நரசிம்மக்ஷேத்திரத்தின் எளிமையழகில் தமது குருவைப் போல் மனம் லயித்த ஸ்ரீ பாதராஜர் அந்த இடத்திலேயே வைகுண்டமாக எண்ணி, அங்கிருந்தபடியே நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மத்வசித்தாந்தத்தைப் பிரசாரம் செய்து வந்தார்.பிரகலாதனின் அம்சமாகவும், பின்னாளில் ஸ்ரீராகவேந்திரராகவும் அவதரித்த ஸ்ரீவியாசராயரைத் தமது முதன்மைச் சீடராக ஏற்ற ஸ்ரீபாதராஜர், நரசிம்மர் ஆலயம் கொண்டிருக்கும் நரசிம்ம க்ஷேத்திரத்திலேயே பிருந்தாவனம் பிரவேசம் செய்துவிட்டார்.மகான் ஸ்ரீபாதராஜரை மிகவும் கவர்ந்த ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிறோம்.முதலில் நம்மை வரவேற்பது ஸ்ரீபாதராஜர் மடம்தான் அதைக் கடந்து நாம் யோகநரசிம்மரின் கருவறைக்குள் நுழைகிறோம்.இங்கு யோகநரசிம்மர் தமது திருக்கால்களை குறுக்காக மடித்தபடி ஸ்ரீஐயப்பன் வீற்றிருப்பது போல் வீற்றிருக்கிறார். திருக்கால்களிரண்டும் நழுவாதிருக்க யோகப் பட்டயம் கட்டிய நிலையில், மேலிருகரங்கள் சங்கமும், சக்கரமும் தரித்திருக்க, யோக நிலையில் அருட்காட்சி தருகிறார். யோகநரசிம்மரைத் தரிசித்து நின்ற நம்மிடம், சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த முரளி என்ற அன்பர், ‘தாம் ஒரு வருடத்திற்கு முன்னர் யோக நரசிம்மர் வளர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.யோக நரசிம்மரின் கருவறைக்கு அருகிலேயே ஒரு கருவறையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் அருள்கிறார். இவரும் ஒரு பெரிய பாறையில் புடைப்புச் சிற்பமாகவே காணப்பெறுகிறார்.இந்த ஆஞ்சநேயரிலும் ஒரு விசேஷம் இருக்கிறது. ஸ்ரீபாதராஜரின் அருளால் சகல சாஸ்திர விற்பன்னராகி, பிற்காலத்தில் தென்னாடு முழுவதும் எழுநூறுக்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் திருவடிவங்களைப் பிரதிஷ்டை செய்த மகான் ஸ்ரீவியாசராயர் பிரதிஷ்டை செய்த இரண்டாவது ஆஞ்சநேயர் ஆவார் இவர்.ஒரே ஆலயத்தில் அமைந்திருக்கும் இந்த இரு சந்நதிகளில் யோக நரசிம்மர் கிழக்கே பார்க்கிறார்; ஆஞ்சநேயர் வடக்கே பார்க்கிறார். சந்நதிக்கு வெளியில் இருந்த குறுகிய பிராகாரத்தை வலம் வருகிறோம். பின்புறம் ஒரு பெரிய பாறை. அதில குகை மாதிரி வாயில் இருக்கிறது. சற்று சிரமப்பட்டு உள்ளே சென்று பார்க்கிறோம். பாறைச்சுவரில் ஒரு துறவியின் சிற்பம் அவர் தலைமீது ஒரு நாகம் குடை பிடித்திருக்கிறது. நாம் அந்தச் சிற்பம் யாருடையது?’ என்று வந்த அன்பரிடம் கேட்க,அவர், இவர்தான் ஸ்ரீவியாசராய சுவாமிகள். ஸ்ரீபாதராஜரிடம் துறவுச் சீடராக இருந்த வியாசராயர் அடிக்கடி இந்தக் குகையில் வந்து தியானத்தில் அமர்ந்துவிடுவது வழக்கம். ஒரு நாள் அவர் அவ்வாறு தியானத்தில் இருந்தபோது, அவருடைய தலைக்கு மேலாக ஒரு நாகம் படம் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஓடோடிப் போய் ஸ்ரீபாதராஜரிடம் கூற, வந்து பார்த்த ஸ்ரீபாதராஜர், ஆனந்தக் கண்ணீர் பெருக்கியவராய், ஸ்ரீவியாசராயரைக் கட்டித் தழுவி, ‘‘நீ சகல சாஸ்திரத்தையும் கற்றுத் தேர்ந்துவிட்டாய். இனி நீயே மற்ற சீடர்களுக்குக் கற்பிப்பாய்’’ என்று கூறிவிட்டார்.இந்த இரண்டு இடங்களுக்குமிடையே ஒரு நீளமான கல்மண்டபம். அதில் ஒரு கருவறையில் பிரகலாத சுவாமி சந்நதி. பக்தர்கள் நாமசங்கீர்த்தனம் செய்கிறார்கள்’ பஜனை நடத்துகிறார்கள். மண்டபத்தின் முன்னால் இடதுபுறம் ஒரு பெரிய சதுரக் கிணறு மாதிரியான பள்ளத்தினுள் சிறிதும் பெரிதுமாக பதினொரு பிருந்தாவனங்கள்.இந்த பிருந்தாவன வளாகம், இடப்புறம் யோக நரசிம்மர் சந்நதியையும், வலதுபுறம் ஒரு தனி தாழ்வாரத்துடன் ஒரு பெரிய பிருந்தாவனத்துடன் உள்ளது. அந்தப் பெரிய பிருந்தாவனம்தான் ஸ்ரீ பாதராஜர் அதிஷ்டானம்.மூன்று பிராகாரங்களைக் கொண்ட பிருந்தாவனத்தின் நடுவில், நான்கு புறமும் பக்தர்கள் வலம்வரும் விதத்தில் நடுவில் அஸ்திவார கட்டிடத்தின் மீது ஆளுயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருக்கிறது ஸ்ரீபாதராஜர் பிருந்தாவனம். அதனடியில் ஒரு குகை இருப்பதாகவும், அதனுள்தான் ஸ்ரீபாதராஜர் யோக நிலையில் அமர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.பிராகார சுற்றுச் சுவரில் ஸ்ரீபாதராஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. யோக நரசிம்மரையும், ஸ்ரீ பாதராஜரையும் வணங்கி வெளிவந்தபோது, நம்முடன் வந்த அன்பர் எதிரிலிருந்த ஒரு தீர்த்தத்தைக் காட்டி, ‘‘இதுதான் யோக நரசிம்மரின் ஆலயத்தின் தீர்த்தம். இதன் பெயர்தான் இன்றைக்கு இத்தலத்திற்கு வழங்கப் பெறும் நரசிம்ம தீர்த்தம் என்பது. ஸ்ரீபாதராஜரால் தோற்றுவிக்கப்பட்ட இந்தத் தீர்த்தத்தில் கங்கையே பலர் காண ஆகாய கங்கையாகப் பொழிந்து புனிதம் சேர்த்தாள்’’ என்றார். அப்படி கங்கா தேவி ஆகாய கங்கையாகப் பொழிந்து புனிதம் சேர்த்ததன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது. மகான் ஸ்ரீ பாதராஜர் காலத்தில் நிகழ்ந்த அந்த வரலாறு…ஸ்ரீபாதராஜர் முளபாகல் ஸ்ரீநரசிம்ம க்ஷேத்திரத்திலேயே பலகாலம் தங்கி ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு வந்தார். எப்போதும் அவரைச் சுற்றி பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருந்தது. துருவனின் அவதாரமான ஸ்ரீபாதராஜர் தாம் சன்னியாசியாக இருந்தாலும், தினமும் வாசனை எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து, பட்டுப் பீதாம்பரமும், முத்துக்குல்லாயும் அணிந்து, கண்ணனுக்கு நிவேதனமாக சமரப்பிக்கும் அறுசுவை உணவுகளையும் உண்டு, ராஜரிஷியாகத் திகழ்ந்தார்.ஒரு முறை ஸ்ரீபாதராஜர் காசிக்குச் சென்று கங்காஸ்நானம் செய்து வர தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளில் முனைந்தார். அவரைச் சுற்றியிருந்த வயதான பக்தர்களுக்குத் தங்களால் காசிக்குச் செல்ல இயலவில்லையே என்ற ஏக்கம், மன வருத்தம்.தமது பக்தர்களின் ஏக்கம் நீங்கிட என்ன செய்வது என்ற சிந்தனையில் ஸ்ரீபாதராஜர் ஈடுபட்டார்.அவரது சிந்தனையைக் கலைப்பது போல் கங்காதேவி அசரீரியாகத் தோன்றி, ‘எங்கே தினமும் கடவுள் வழிபாடு நடைபெறுகிறதோ அந்த இடம் பல புண்ணியத் தலங்கள் மற்றும் புண்ணிய நதிகளின் சந்நதியாகவும் திகழும்.துருவனின் அவதாரமான நீ உன் தெய்வத்தை பக்தியுடன் பூஜித்து வருவதால் ஸ்ரீநரசிம்மர் தீர்த்தம் பவித்ரமான இடமாகிவிட்டது. எனவே நான் நாளை காலை நரசிம்ம தீர்த்தத்தின் ஈசானிய மூலையில் தோன்றுகிறேன் என்று கூறியருளி மறைந்தாள்.இந்த அசரீரி வாக்கினை அங்கிருந்த அனைத்து பக்தர்களும் கேட்டனர். ஸ்ரீபாதராஜரின் அருளால் தங்களுக்கு இந்தப் பெரும் பாக்கியம் கிடைத்திருப்பதாகப் போற்றினார்கள்.பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இரவு முழுவதும் பக்திப் பாடல்களைப் பாடியபடி அந்த இடத்தைப் புனிதப்படுத்திக் கொண்டிருந்தனர் ஸ்ரீபாதராஜரும் யோக நரசிம்மருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து, நரசிம்ம தீர்த்தக் கரைக்கு வந்து, ஈசானிய மூலையில் அமர்ந்து, கங்காதேவியைப் பிரார்த்திக்கத் தொடங்கினார்.ஸ்ரீபாதராஜர் யோக நிலையிலிருந்த அதே நேரத்தில் வானில் திடீரென்று மின்னல் தோன்றியது போல் அனைவர் கண்களும் கூசும்படியாக; வெள்ளியை உருக்கிவிட்டதுபோல் வெண்மையான நிறத்தில் கங்காதேவி ஆகாய கங்கையாக வர்ஷித்தாள். ஸ்ரீபாதராஜர் அமர்ந்திருந்த இடத்திலும் கங்கை நீர் பொழிந்தது. சற்றைக்கெல்லாம் நரசிம்ம தீர்த்தம் முழுவதும் நிறைந்துவிட்டது.அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கங்கையில் புனித நீராடி மகான் ஸ்ரீபாதராஜரின் அருளாசிகளைப் பெற்றனர். அன்றிலிருந்து இன்று வரை அந்தத் தீர்த்தத்தில் கங்காதேவி நிலை பெற்றிருக்கிறாள். அதற்கு எடுத்துக்காட்டாக சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடைபெற்றது.அப்பொழுது முளபாகலில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, பல குளங்களும், ஏரிகளும் வற்றிவிட்டன. நரசிம்ம தீர்த்தத்திலும் ஈசானிய மூலையில் கங்கா தேவி விழுந்த இடம் தவிர மற்ற இடத்தில் வெறும் சகதிதான் இருந்தது- எனவே ஆட்களை அழைத்துச் சகதியை எடுத்துச் சுத்தப்படுத்த எண்ணி ஆட்களை வரவழைத்தார்கள். வந்தவர்கள் தீர்த்தத்தின் ஈசானிய மூலைப் பகுதியைத் தவிர, பெரும்பகுதியை சுத்தம் செய்துவிட்டு, மறுநாள் ஈசானிய மூலையைச் சுத்தம் செய்வதாகக் கூறிச் சென்றனர்.ஆனால் அவர்கள் சென்ற சில மணி நேரத்திற்குள்ளேயே, அப் பகுதியில் பலத்த மழை பெய்து தீர்த்தம் நிறைந்துவிட்டது. ஈசானிய மூலையில் கங்கையில் வாசம் இருப்பதால் அங்கு சுத்தம் செய்யக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி நேர்ந்தது போலும்.நாளும் வளர்ந்து, வாழ்வில் நலமெல்லாம் சேர்த்து யோக நரசிம்மரையும்; இத் தலத்திற்கு வருபவர்கள் எதற்குமே அஞ்ச வேண்டியதில்லை என்று அபயமருளி நிற்கும் ஆஞ்நேயரையும்; நாளும் வளரும் நரசிம்ம மூர்த்தி அத் தலத்தில் பிரதிஷ்டை பெற கர்த்தாவாகத் திகழ்ந்த மகான் ஸ்ரீஅட்சோப்பிய தீர்த்தரையும்; நரசிம்ம க்ஷேத்திரத்திற்கு மேலும் புனிதம் சேர்ப்பித்த மகான்கள், துருவனின் அம்சமான ஸ்ரீபாதராஜ தீர்த்த சுவாமிகளையும் பிரகலாதனின் அம்சமான ஸ்ரீவியாசராய சுவாமிகளையும்;ஸ்ரீபாதராஜரின் பிரார்த்தனையால் நரசிம்ம தீர்த்தத்தில் சங்கமம் ஆகி, நீராடும் பக்தர்க்கெல்லாம் புண்ணியம் சேர்க்கும் கங்கா தேவியையும் தியானித்தபடி அப்புனிதத் தலத்தை விட்டுக் கிளம்பிய நம் மனத்தில், நாளும் வளர்ந்து நலம் பெருக்கும் யோக நரசிம்மரின் நல்லருளை நமக்கு அத் தலத்திற்கு மகிமை சேர்த்த மகான்கள் குருவாக இருந்து பெற்றுத் தருவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை தோன்ற, பூரண சாந்தம் நிறைந்தது!(தரிசனம் தொடரும்)தலத்தின் பெயர் : நரசிம்ம தீர்த்தம் – நரசிம்ம க்ஷேத்திரம்.இருப்பிடம் : சென்னை – சித்தூர் -பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் முளபாகல் என்ற இடத்தில் அமைந்துள்ளது.மூர்த்தின் பெயர் : அருள்மிகு யோக நரசிம்மர்தீர்த்தம்  : நரசிம்ம தீர்த்தம்திருவிழாக்கள் : மாதந் தோறும் ஏகாதசி; வைகுண்ட ஏகாதசி; ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி, ஆண்டுதோறும் ஆனி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தியையொட்டி மூன்று நாட்கள் நடைபெறும் ஸ்ரீபாதராஜர் ஆராதனை விழா போன்றவைகள் முகவரி : அருள்மிகு யோக நரசிம்ம ஆலயம், ஸ்ரீபாதராஜர் மூல பிருந்தாவனம், நரசிம்ம தீர்த்தம், முளபாகல் அஞ்சல், கோலார் மாவட்டம், கர்நாடக மாநிலம் …

The post நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-26 appeared first on Dinakaran.

Tags : Narasimmer ,Narasimma Murthi ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...